Wednesday, May 14, 2014

கண் தானம் செய்வது எதற்கு? எப்படி?... யாரெல்லாம் செய்யலாம்... மேலும் சில ...

மண்ணுக்குள் புதைக்கும் கண்களை
மனிதருக்குள் விதைப்போம்...



கண் வங்கி என்றால் என்ன?

விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகிய பயன்பாடுகளுக்கு கண் தானம்
அளிப்பவர்களின் கண்களை மதிப்பிட்டு பார்வையில்லாதோருக்கு தானம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே கண் வங்கி. மாற்றுக் கண் பொறுத்தப்படுவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிரமான மருத்துவ அளவுகோல்களின் பரிசோதனைகளின்படி தானம் செய்யப்பட்ட கண்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது.

தானமாக வரும் கண்கள் அனைத்தும் விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக இருக்காது, எனவே அவைகள் ஆய்வு மற்றும் கண் கல்விக்கு பயன்படுத்தப்படும்.

கண்தானம் ஏன் செய்ய வேண்டும்?

விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வையற்றோரில் 90 சதவீதத்தினருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. பிறவியிலேயே விழிவெண்படல நோயால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு கண் பொருத்தப்படுவதன் மூலம் பார்வை கிடைத்துள்ளது.

விழி வெண்படலம் என்றால் என்ன?

கண்ணீரின் கறுப்பான பகுதிக்கு முன்பு வெளிப்படையாக தெரியும் வெண்படலமே விழி வெண்படலம் என்ற கார்னியா ஆகும். இதுதான் ஒளிக்கதிர்களை குவித்து, கண்ணுக்குள் இருக்கும் ஒளியுணர்வு ஜவ்வுக்கு அனுப்புகிறது. ஆகவே கண் அமைப்பிலேயே மிகவும் முக்கியமான பகுதி இதுவே. கண்ணின் ஒளி ஊடுருவும் தன்மை சேதமடையும்போது பார்வை இழப்பும் ஏற்படுகிறது.

விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?

பழுதடைந்து பார்வை சக்தியை இழந்த விழிவெண்படலத்தை தானமாக வந்த கண்ணின் வெண்படலம் மூலமாக மாற்று அறுவை சிகிச்சை செய்தலே இத்தகு அறுவை சிகிச்சை.

விழிவெண்படலம் பழுதடைவது ஏன்?

1. நோய்க்கிருமி
2. காயங்கள்
3. மருத்துவர்களால் ஏற்படுவது
4. ஊட்டச்சத்து குறைவு
5. பிறவி / மரபணு.

இந்தியாவில்....

உலக பார்வையற்றோர் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 25 சதவீதம் பேர்.

27 மில்லியன் - மித பார்வை கோளாறு
9 மில்லியன் - இருகண் பார்வையின்மை
2,60,000 - பார்வையற்ற குழந்தைகள்


விழிவெண்படல அந்த கன்மத்தால் இந்தியாவில் அவதியுறுவோர் எண்ணிக்கை 4.6 மில்லியன். இதில் 90 சதவீதம் பேர் 45 வயதுக்கு கீழே உள்ளவர்கள். 60 சதவீதத்தினர் 12 வயதுக்குட்பட்டோர் ஆவார். இந்த 4.6 மில்லியன் பேர்களில் 3 மில்லியன் பேர் விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சையால் பயனடைய முடியும்.

யார் கண்தானம் செய்ய முடியும்?மேலும் கடைபிடிக்கவேண்டிய சில வழிமுறைகள்...

1 வயது முதல் கண்தானம் செய்யலாம். இதற்கு வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை. மந்தமான கண் பார்வையோ, வயதோ வித்யாசத்தை ஏற்படுத்தாது. ஆனால் மாற்றுக் கண் பொருத்தும் அறுவை சிகிச்சை, தானம் செய்யப்பட்ட கண்களை தீவிரமாக பரிசோதித்த பிறகே பயன்படுத்தப்படும்.


கண்ணாடி போட்டுக் கொள்பவர்கள், காடராக்ட் செய்து கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு உடையவர்கள் என்று அனைவரும் கண் தானம் செய்யலாம்.. இதற்க்கு செய்ய வேண்டியவை....

இறந்தவரின் கண் இமைகளை உடனே மூடவேண்டும்.

மின்விசிறியை இயக்கக்கூடாது.

இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.

அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும்வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.தனது மரணத்திற்குப் பிறகு தனது கண்ணை தானம் செய்வது புனிதமான செயல். ஆனால் நண்பர்களோ, உறவினர்களோ உங்களது இந்த புனித ஆசையை நிறைவேற்ற வேண்டும்.

யார் கண்தானம் செய்ய முடியாது?

நாய் கடியால் இறந்தவர்கள், டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தினால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியாது.

கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:

1. ஒருவர் இறந்த 4 - 6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.

2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.

3. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும்.

4. கண்தானம் செய்ய 20&30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.

5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.

6. கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.

7. ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும்

இயன்றவரை இரத்த தானம்
இறந்த பின் கண்தானம்....

No comments: